கூ... கூ... ரயிலே...



தினமும் செய்யும் சமரச முயற்சி
என்றும் இணையா தண்டவாளம்
தொடரும் முயற்சியாய்
ரயிலின் பயணம்...


ஹைக்கூ...



தென்றல் தொட்டதும்
தன்னையே மாய்த்துக்கொள்கிறதோ
பத்தினி தீச்சுடர்...!

நன்றி...




தன்னைத் தருவித்த
மண்ணுக்குத் தலைவணக்கமோ...
தானே உதிர்ந்து
மண்ணைத்தொட்ட மலரிதழ்கள்!..

பிரிவு!!!!


எச்சில் விழுங்கி
ஈரப்படுத்திக்கொண்ட தொண்டையில் - இன்னும்
மிச்சமிருக்கிறது
உனக்கான என் அழுகை...

நீ என்னைப் பிரிந்தநாளின் துயரம் - என்
மனச்சுவற்றின் மேல் எம்பிக்குதிக்கிறது
உன்னுடனான இனிய நினைவுகளால்
மனச்சுவற்றின் உயரத்தை நீட்டித்துக்கொள்கிறேன்...

உண்மை சொல்லி - மனம்
உரக்கக் கத்தினாலும்
கண்ணில் வழியும் கண்ணீர் - அதன்
சத்தத்தைத் தன்னோடு கரைத்துக்கொண்டோடுகிறது...

அநாதை...



முகவரி இல்லாக் கடிதம்...
தனித்து மேயும் ஒற்றை ஆடு...
நெடுக உயர்ந்த பட்டமரம்...
கல்லடிப்பட்டு கதறும் நாய்க்குட்டி...
கையேந்தி நிற்கும் தெருவோரச்சிறுமி...
என்று எங்கேனும் எப்போதும் ஏதாவதொன்று
நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறது
நான் அநாதை என்று...