EN MAKAN, AVANUDAIYA 1 VAYATHIL...

நேற்றிரவு பெய்த மழை!



















நேற்றிரவு பெய்த மழையில்


தலை துவட்டிக்கொண்ட அடர்மரங்கள்
குளித்து அழுக்ககற்றிக்கொண்ட சாலைகள்
புகைப்படலம் நீங்கிய கட்டிடச்சுவர்கள்
பூத்துச்சிரிக்கும் வேலியோர மலர்ச்செடிகள் 

தேங்கியிருக்கும் நீரில் குதித்து
விளையாடிக்களிக்கும் சேரிச்சிறுவன்

வேதனை....

மழைக்குமில்லை
மழலைச் சிறுவனுக்குமில்லை...




மௌனமழை...!
















நிதமும் தான் நான்
நனைகிறேன் என்றாலும்....

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு அர்த்தங்களைப்

பொழிகிறது உன் மௌனம்...


Image Courtesy :- Google

குறும்பா...!












உள்ளக் கவலை  துடைக்கும்
உப்புத்தண்ணீர்
கண்ணீர்...












வசந்தத்திற்கும்
வறுமையோ
...கோடை வெயில்


Image Courtesy :- Google

ஓர் இதயத்தவம்...!


























உன் நினைவுகளைப் பதியமிட்டு
கண்ணீரூற்றி வளர்க்கிறது பிரிவு...
நம் காதலை...

என் முட்பாதையிலும்
பூக்கள் முளைக்கிறது...

இந்தப் பாலை மனத்திலும் 
சோலை மணக்கிறது...

உணர்வுக்கருவில் 
உதித்த இம்மலருடன் 
உனக்கெனச் செய்வேன்
ஓர் இதயத்தவம்...

நீ வரும் வழி நோக்கி...!!!


Image Courtesy:- Google.




௨ ௪ ௭...



















ஒவ்வொரு பொழுதும்
ஓடோடி வந்து

காதோரக் கூந்தல்
கலைத்துப் பேசிய கொஞ்சல்களும்...

உடல் சிலிர்க்கச் செய்த
குளிர் தீண்டல்களும்...

ஆடை கலைத்துச்
சீண்டிய செல்லக்குறும்புகளும்...

இன்னும்...

சுவாசமாகிச் சேர்ந்து
உதிரத்தில் உயிர் வரைந்த

காற்றே!!!

உன்னைக் காதலிக்கிறேன்....


தலைப்புக் குறிப்பு : ௨ ௪ ௭ (2 4 7 - நான் உன்னைக் காதலிக்கிறேன்) 


Image Courtesy : Google

இ(க)யலும் இசையும்...!

















தண்ணீர் குளத்தில் என்
கண்ணீர் கரைய
காலமெல்லாம் நீந்தியும்
கரை விரும்பாக் கயல் நான்...

இமைக்காத விழிகளின்
பாரம் தீர
இசைக்கவந்தாயோ நீருக்குள் ராகம்...!

கண்ணீருக்கு மருந்தாக
கவலைக்கு விருந்தாக
தனிமைக்குத் துணையாக

சோகம் உடைத்து
ஸ்வரம் பாட
என் தேவன் தந்த வீணையோ நீ!!!


Image Courtesy : Google

குறும்பா...














குடைக்குள் மழை
ஏழையின்
வறுமைப் பிழை...



Image Courtesy : Google

பார்வை....!



பற்றவைக்கப்படாத
தீக்குச்சியாய்


மிரட்டிக்கொண்டிருந்த
நினைவுகளைப்
பட்டென்று உரசிச்
சாம்பலாக்கியது 


உன் பார்வை....!



Image Courtesy : Google

மழைக்காலம்...!



எறும்பின் வாயில்
கிட்டிய உணவாய்...

உன் நினைவுகளனைத்தும்
என் இதயக்கிடங்கின் சேமிப்பில்...

எந்த நேரமும் வரலாம்
கண்ணீர் மழைக்காலம்...!


Image Courtesy : Google

ஒத்திகை...




















இரவுகள் தோறும்
இருவிழிகளின் தியானத்தில்
இறுதிப் பயணத்திற்கு
ஒத்திகையோ...
நித்திரை.....!!!

Image courtesy - Google

செல்லக்குறிப்புகள்....!















சோடி இழந்த செருப்பு
கிறுக்கல் சுவர்
மீசை முளைத்த புத்தகப்படங்கள்
உரக்கச் சொல்கின்றன - இது
குழந்தைகள் வாழும் வீடு...!

படம் - இணையத்தின் உதவியில்...

காதல்...


விழிச்சிப்பிக்குள்
விழுந்துவிட்டாய்
பார் அன்பே...
கருமுத்துக்களாய் ஒளிர்கிறது
என் காதல்....

உழவர் திருநாள்...


எண்ணம் சிறக்க
பசுமை செழிக்க
செல்வம் பெருக
பொங்குக பொங்கல்...















இணைய உறவுகள் அனைவருக்கும் இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்....


--
அன்புடன்
கவிநா...

திரும்பிப் பார்க்கிறேன் -- 2010


கடந்த வருடத்தில் (2010) நடந்த நிகழ்வுகளைப்பற்றி தொடர்பதிவெழுத  அழைத்திருந்தார் கௌசல்யா அக்கா. அவருக்கு என் நன்றிகள்.

இதுவரை கவிதைகள் மட்டுமே எழுதி வந்த என் வலைப்பூவில் வித்தியாசமான முதல் பதிவு இது.
என்னால் எழுத முடியுமா என்ற கேள்விக்குறியுடன் தான் ஆரம்பித்திருக்கிறேன்.

வலைப்பூ

2007 -ஆம் வருடத்திலேயே எனது வலைப்பூ பயணம் ஆரம்பித்திருந்தாலும், மற்ற நண்பர்களின் வலைப்பூக்களை அதிகம் வாசிக்க வாய்ப்பளித்தது இந்த 2010 தான். அந்த விதத்தில் இது எனக்கு மிகச்சிறந்த வருடம்.

அடுத்து, ஓவியக்காதல் என்ற என் இன்னொரு வலைப்பூவை துவங்கியதும் இந்த வருடம் தான்.

நட்புறவுகள்

பொதுவாகவே இணையம் என்றாலே பெண்களுக்கு ஏற்படும் பயத்துடன் தான் என் பயணமும் துவங்கியது. ஆனால், எனக்கு வாய்த்த சகோதர சகோதரிகள், தோழர் தோழிகள் அந்த ஐயத்தைத் துடைத்துவிட்டனர். கடந்த வருடத்தை திரும்பிப்பார்க்கும் வேளையில் என்றும் என்னுடன் கைகோர்த்து ஊக்கமளிக்கும் உள்ளங்களையும் நினைவுகளையும் நெஞ்சம் துடிக்கிறது.

நண்பர்கள் விஷ்ணு, விஜய், சீமாங்கனி, D.R.அசோக், சரவணன், கணேஷ் தோழிகள் தென்றல், ஹேமா, பூங்குழலி அக்கா, கௌசல்யா அக்கா இன்னும் பல உள்ளங்கள் என் எழுத்துக்களைப் படித்து அவற்றைச் செம்மைப்படுத்த ஊக்கமளிக்கின்றனர். அவர்களுக்கு என் நன்றிகளையும் சமர்ப்பிக்கிறேன்.

ரசிக்கும் எழுத்துக்கள்
 

நான் தொடரும் வலைப்பூக்கள் பெரும்பாலும் கவிதைகள் பற்றியதாகத்தானிருக்கும். அதில் சில விதிவிலக்குகள் என்றால், கணேஷ்-இன் வலைப்பூ, மற்றும் கௌசி அக்காவின் "மனதோடு மட்டும்".
கணேசின் நகைச்சுவை கலந்த அறிவியல் பிடிக்கும். கௌசி அக்காவின் மனதோடு பேசும் எழுத்துக்கள் பிடிக்கும்.
சரவனக்குமாரின் "பார்த்ததும் படித்ததும்" வலைப்பூ. அவர் படித்து ரசித்ததையெல்லாம் எழுதுகிறார். இப்போது கொஞ்ச நாட்களாக சுயமாக நிறைய விஷயங்களை பதிவிடுகிறார். சரவணன் எனக்கொரு நல்ல நண்பன்.
விஜய் அண்ணாவின் கவிதைகள், அவை என்னால் விமர்சிக்கமுடியாத உயரத்தில் இருப்பவை. அவரின் எழுத்துக்களைப் படிக்க நான் அகராதி ஒன்றை வாங்குவதாய் இருக்கிறேன். :)
இன்னும் நான் ரசிக்கும் பல வலைப்பூக்கள் இருக்கின்றன.

என் டைரி

நிகழ்வுகளைப் பதிய
நேரமில்லை
நினைவுகளைப் பதிகிறேன்
கவிதைகளாக்கி....

இணையம் 

இணையம் இன்னுமொரு தனி உலகம். எழுத, படிக்க, பகிர, மகிழ, அறிய, வாழ அத்தனைக்கும் வழிவகுக்கும் மற்றொரு பூமி.
இந்த பூமியில் காலாற உலவ 2011 நம்மை வரவேற்றிருக்கிறது. அனைவருக்கும் இவ்வருடம் இனிதாக அமைய நல்வாழ்த்துக்கள்...


தொடர்பதிவெழுத யாரையேனும் அழைக்கவேண்டுமே!!??

எனக்குத்தெரிந்த பலரையும் பலர் அழைத்துவிட்டதால் தொடர்பதிவின் இலக்கணத்தை மீறுகிறேன். மன்னிக்கவும்... :(


பின்குறிப்பு:-


வெற்றுப் பக்கங்களே
விதியாய்க் கொண்டு
என்னிடம் அடைக்கலமான
என் டைரி....


இந்த நிலை மாற,
இந்த வருடமாவது உருப்படியாக சொல்லும்படி எதாவது செய்வேன் என்ற நம்பிக்கையில் 2011 -ஆம் வருடத்தை பூத்தூவி வரவேற்கிறேன்... :)))

வண்ணத்துப்பூச்சி...

















இறகுச் சுவற்றில்
வரைந்து வைத்த
வண்ணச்சித்திரம்...

தேர்ந்த ஓவியனின்
எண்ணக்குறிப்போ...!!!

கனவுகள் கவர்ந்த உறக்கம்...































எங்கோ இலக்கின்றிச் செல்லும்
பறவையின் நுனிச்சிறகைப்
பிடித்துக்கொண்டு பறப்பதாக ஒரு கனவு...

இருண்மை தேசத்தில்
வெடித்தெழும்பும் ஒளிப்பிரளயத்தினின்று
தேவதை உதிப்பதாக ஒரு கனவு....

கைப்பறித்து  மண்ணிலிட்ட விதை
நீர் விடும் முன்  நெடுமரமாக
நிமிர்வதாய் ஒரு கனவு...

கனவின் பொருள் புரியாமல்
சாமத்தில் விழித்தெழும்
சாபம் பெற்றவளாய் நான்...

மழை...















உள்ளத்து ஆசைதனை
மண் சேர்க்கத்துடிக்கும்
மேகத்தின்
கண்ணீர் விடு தூது...!

விழியோரம்
















உன் நினைவுகளென்ன
சுமைதாங்கியா!

வருடிச்சென்றதும்
வழிந்தது பாரம்

விழியோரம் ஈரமாய்....!

தூறல்...





சாலைக்குழியில் தஞ்சமடைந்த
மழை நீரும்
அதனை அலைபாயவைக்கும்
மரத்தூரலுமாய்

என் இதயமும்...
உன் காதலும்...

இறகைப்போலே...!

















தவழ்ந்துவரும் காற்றில் மிதந்து
திசைகளெங்கும் திரியும்
இறகைப்போலே...

பிரியங்களைச் சுமந்த
என் எண்ண அலைகள்
உன் சுவாசக்காற்று தேடி வருகிறது...

மனவாசல் திறந்து வைக்க
மறவாதே...!

நம்பிக்கை



















பேருந்து நிறுத்தத்தின்
பெருநெரிசலில்
கிடைத்ததொரு சிறுமூலையில்
கடை விரித்துக் காத்திருக்கும்
கிழவியின் கண்களில்...


குறும்பா ...




சாவு வீட்டிலும் சந்தோசம்
எச்சில் இலை கண்ட
நாய்களுக்கு...

இரவுகள்...
























சயனம் தொலைத்தே
சரிகின்றன என் இரவுகள்...

குருதியில் தோய்த்த
என் கனவுகளைக் கவர்ந்து
விடிகிறது வானம்...

எப்போதும் போல்
என்னைக்கடந்துபோகும் மேகங்களுக்குள்
இரக்கமற்ற புன்னகையுடன் நீ...!

தீபாவளித் திருநாள்!





















நண்பர்கள், சகோதரர்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்....

என்றும் அன்புடன்
உங்கள் தோழி,
கவிநா....

பிரிவுத்தூறல்...!



















தூறும் மழைச்சாரலும்
உன் புன்னகையும்
ஒன்றெனவே தோன்றியது
நம்முடன் கைகோர்த்து நாட்கள் நடந்தபோது...

இன்று...

நாட்காட்டிக் காகிதங்கள்
என்னைக் கிழித்துத்
தன்னைத் தொலைக்கிறது...

இன்றும் உன்னை ஒப்பிடுகிறது மனது...

வெடித்துக்கிடக்கும் நிலத்தைப்பார்த்து
வெளிரிச்சிரிக்கும் மேகத்தோடு...!


உடையும் கனவுகள்!






மஞ்சள்வெயில் மாலையில்
மெல்ல நகரும் முகில்கள்...
காற்றோடு
பட்டும் படாமலும்
தொட்டும் தொடாமலும்
உரசிச்செல்வதைப்போல

என் நெஞ்சமெங்கும்
உன் நினைவுகள்...

சோப்புக்குமிழிகளாய்
உயிர்பெறும் உன் நினைவுகளைச் 
சிறுகுழந்தையாகிச் சிலாகிக்கிறேன்...
உடைந்துவிடும் எனத்தெரிந்தும்...







குறும்பா....





பரமன் பாம்புக்குப் படி அளந்தான்
பலியாகிப்போனது தவளை
மழைக்கால இரவு...

உன் நினைவின் சக்தி...!



விரத நாட்களின் பசியாக
விடுமுறை நாட்களின் பணியாக

இம்சித்துக்கொண்டிருக்கிறது
இதயத்தை
உன் நினைவுகள்...

கடல் தாண்டும் பறவைபோல்
மலை தாண்டும் முகிலைப்போல்

ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளுக்கு
ஆற்றல் அதிகமே!...

ஹைக்கூ...




நேற்றைய நிகழ்காலத்தைச் சிறைப்பிடித்த
இன்றைய இறந்தகாலம்
புகைப்படம்...






கனவோடு வா...





விளக்கு உமிழும் வெளிச்சத்தில்
நிறம் மாறும் சுவர்ப்பூச்சு...

ஓயாமல் சுழன்று
பெருமூச்செறியும் மின் விசிறி...

காற்றின் வேகத்தில் படபடத்துச்
சிரிக்கும் நாட்காட்டிக் காகிதங்கள்...

அயராது உழைக்கும்
கடிகார முட்களின் காலடி ஓசை...

என,

உயிரற்ற பொருட்களெல்லாம்
உயிர்ப்புடன் உலவிக்கொண்டிருக்க...

என் உறக்கத்திற்கும் உயிர்கொடுக்க
உன் கனவுகளைப் பரிசளித்தது இந்த இரவு...!

இரவோடு வரும் கனவோடு வா உயிரே...!!!


எதிர்த்துருவ விழிகள்...!



ஓடும் நீரையும் சிறைபிடிக்கும் புகைப்படமாய்...
நகரும் என் நிகழ்காலத்தைச்
சிறைபிடிக்கிறது உன்
காதல் கயல்விழிகள்...

எனை வஞ்சிக்கும் என்னமோ வஞ்சியுனக்கு?
காதற்பஞ்சும் கன்னி உன்
பார்வை நெருப்பும்
பற்றிக்கொண்டு எரியுதடி
பரந்த என் நெஞ்சில்...

உன் ஒற்றைத்துளிக் கண்ணீர்
எனக்கெனச் சுரந்தால் போதுமடி...
என் நெஞ்சத்து நெருப்பணைத்துக் குளிரூட்ட...
தீயாய் நீயும், நீராய் நானும்
நீ என்னை எரித்துக்கொண்டும்!
நான் உன்னை நனைத்துக்கொண்டும்!

எதிரெதிர்த்துருவங்கள் ஈர்க்குமாமே!
நீ என்னை ஈர்க்கிறாய்...
உண்மையைச் சொல்...
நான் உன்னை???...

கூ... கூ... ரயிலே...



தினமும் செய்யும் சமரச முயற்சி
என்றும் இணையா தண்டவாளம்
தொடரும் முயற்சியாய்
ரயிலின் பயணம்...


ஹைக்கூ...



தென்றல் தொட்டதும்
தன்னையே மாய்த்துக்கொள்கிறதோ
பத்தினி தீச்சுடர்...!

நன்றி...




தன்னைத் தருவித்த
மண்ணுக்குத் தலைவணக்கமோ...
தானே உதிர்ந்து
மண்ணைத்தொட்ட மலரிதழ்கள்!..

பிரிவு!!!!


எச்சில் விழுங்கி
ஈரப்படுத்திக்கொண்ட தொண்டையில் - இன்னும்
மிச்சமிருக்கிறது
உனக்கான என் அழுகை...

நீ என்னைப் பிரிந்தநாளின் துயரம் - என்
மனச்சுவற்றின் மேல் எம்பிக்குதிக்கிறது
உன்னுடனான இனிய நினைவுகளால்
மனச்சுவற்றின் உயரத்தை நீட்டித்துக்கொள்கிறேன்...

உண்மை சொல்லி - மனம்
உரக்கக் கத்தினாலும்
கண்ணில் வழியும் கண்ணீர் - அதன்
சத்தத்தைத் தன்னோடு கரைத்துக்கொண்டோடுகிறது...

அநாதை...



முகவரி இல்லாக் கடிதம்...
தனித்து மேயும் ஒற்றை ஆடு...
நெடுக உயர்ந்த பட்டமரம்...
கல்லடிப்பட்டு கதறும் நாய்க்குட்டி...
கையேந்தி நிற்கும் தெருவோரச்சிறுமி...
என்று எங்கேனும் எப்போதும் ஏதாவதொன்று
நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறது
நான் அநாதை என்று...

என் செய்தாய் அன்பே?














என் இரவுக்குள்ளே இரைத்துவிட்டானோ
வானவில்லின் சாயங்களை
கனவுகள் எல்லாம்  வர்ணங்களில்...

என் இதயத்துக்குள்ளே இசைக்கவிட்டானோ
காட்டுக்குயிலின் கானங்களை
துடிப்புகள் எல்லாம்  ராகங்களில்...

என் உயிருக்குள்ளே உலவவிட்டானோ
நிம்மதியின் சாரங்களை
நினைவுகள் எல்லாம் சொர்க்கங்களில்...

சிறை...

















உனைச் சிறைவைப்பேன்
இரு இமைகளுக்குள்....

காதலனே....!

என் உறக்கம் திருடிய
கள்வன் நீ..!

மேகக்காதலி...!





















மிதக்கும் மேகங்களில்
ஒருத்தியாய் நான்...

காற்றின் அசைவுக்கு நகர்வதாய் - உன்
காதலின் அசைவுக்கு இசைகிறேன்...

உன்னில் பருகிய காதலை
மண்ணில் பொழிகிறேன் மழையாக...

மண்ணைச்சேர்ந்த காதல் மழை
மீண்டும் என் மடிசேர்கிறது...

இதோ...

மிதக்கும் மேகங்களில் ஒருத்தியாய்
மீண்டும் நான் - உன்

காதலைப் பருகப்பருக...
தீராத தாகத்தில்...

படம் உதவி - நன்றி நண்பர் விஷ்ணு...

கொலுசு...!
















என்ன தவம்தான்
செய்து வந்ததோ...?! - உன்
வெள்ளிக்கொலுசுகள்...
துள்ளி விளையாடும் -
உன் பாதங்களைக்
கிள்ளி உறவாடிக்களிக்கிறதே...!!!

காதல் சிற்பம்!





















கருவிழிக் கணைபட்டு
உருகியது எனதுள்ளம்...!!!

வழிகின்ற இதயத்தை வழித்தெடுத்து
வடித்துத் தருவாயா
களங்கமில்லாக் காதல் சிற்பத்தை...?

என்
ஆயுள் மேடை
ஆயத்தமாயிருக்கிறது...
அலங்கரிக்கவரும்
அற்புதக்காதலை நோக்கி...

ஹைக்கூ












கணவன் இறந்ததால் விதவைக்கோலமோ
வெள்ளைத் தாளின் மேல்
மைதீர்ந்த பேனா...

கனவுக்குழந்தை...!





















என் கனவுக்கு உயிர் கொடுத்த
காதலே...

உறக்கம் என்பதே
இறந்தகாலம் என்றாகிவிட்டது
எனக்கு...

என் கனவுக்குழந்தையிடம்
கண் சிமிட்டி விளையாடி...
கதை பேசி தூங்கவைக்க...

கூட்டிவருவாயா என் காதலியை...!

மலடியின் மனது... (மலடி இவளின் துணைப்பெயர்)













கல்லெறிந்த குளமாய் மனம்
கலங்கித்தான் போகிறது...

மலடி எனும் மூன்றெழுத்தே
என் பெயராகிப் போனதில்...

எரியூட்டப்பட்ட சிதையாய் மனம்
எழுந்தாலும் இறுதியில்
எஞ்சுவதென்னவோ கொஞ்சம்
மௌனச் சாம்பலே...

மகரந்தம் சுமக்கும்
மலராகப் பிறந்திருக்கலாம்
மண் துளைத்து முளைக்கும்
விதைகளை ஈன்றிருப்பேன்...

மழைத்துளிகளை தாங்கும்
சிப்பியாகப் பிறந்திருக்கலாம்
மணிக்கழுத்தில் தவழும்
முத்துக்களை ஈன்றிருப்பேன்...

பெண்ணாகப் பிறந்து
மண்ணாகிப் போன வயிற்றால்...

கவலைக் கருவைச்சுமக்கும் என்
கண்கள்...
கண்ணீர்த் துளிகளை அல்லவா
பிரசவிக்கின்றன..?!

தேவதையின் வரம் கேட்ட எனக்கு...
சாத்தானின் சாபமே
சாஸ்வதமாகிப் போனதேன்?

அந்த தேவதை என்போல்
பெண்ணில்லையோ... - இல்லை

அவளுக்கு இதுபோல்
விதியில்லையோ...

தெய்வமே உனக்கு
விழியில்லையோ...

தென்றலே என்வாசலில்
வழியில்லையோ...

--- உரையாடல் கவிதைப் போட்டிக்காக எழுதிய கவிதை இது...


காதல்!....



நினைவுகளின் மனனம்
கனவுகளின் பயணம்
ஆசைகளின் ஜனனம்
ஆன்மாக்களின் சரணம்
காதல் ஒரு புதினம்!...