கண்ணீர் கடிதம்!!!
மறக்க முடியாத மந்திரப் பொழுதுகள்
என் மனதில் மல்லிகையாய் மணம்வீசுகின்றன.
மந்திரத்தில் கட்டுண்டு கிடந்த மனதின்
மயங்கிய தருணம் உன் நினைவுகள் வருடுகிறது.
வருடிய நினைவுகள் தென்றலாய் தழுவுகிறது.
தென்றல் தழுவும்போது மொட்டுக்கள் திறக்கலாம்
ஆனால், உன் நினைவுகள் தழுவும்போது கண்ணீர்
முத்துக்கள் பிறக்கின்றன.
கண்ணீர் முத்துக்கள் கன்னம் வருடும் வேளை
சோகம் அனைத்தும் தண்ணீராய் ஓடிச்சென்று
உள்ளக் கிணற்றில் நிறைகிறது.
ஊசித் தூறலில் உடல் கீறும் குளிராய் உன்
மறுதலிப்பு வார்த்தைகள் என் உயிர் கீறி வதைக்கிறது.
சுகம் தரும் இளவெயிலாய் உன் சம்மதம் எனைச் சேராதா?

சில நேரங்களில்!!!


சில நேரங்களில்!!!
ஊமை விழிகளின் உயிர்வலி கூட புரிவதில்லை
பேசும் இதழ்களின் பிதற்றல்களும் ஒலிக்கின்றன.
சில நேரங்களில்!!!
நா வறழும் நேரம் நீர் கூட கிடைப்பதில்லை
நீரால் இழுக்கப்பட்டு பிணம் கூட கிடைப்பதில்லை
சில நேரங்களில்!!!
சோகத்தின் தருணங்களில் இரு விழி நீர் கூட விழுவதில்லை
சிரிப்பின் சிகரத்திலும் இதழ் கூட விரிவதில்லை
சில நேரங்களில்
சில நிகழ்வுகளில் - சிக்கித்தவிக்கும்
சில மனிதர்கள்!!!

தரிசனம்!


ஓடிவரும் ஆற்றின் ஓர் கரையோரம்
காத்திருந்து யாசித்தேன்
கிடைத்தது உன் தரிசனம்
ஒற்றையடிப் பாதையில்
தவழ்ந்து வரும் தங்க நிலவாய்….

உண்மைக் கவிதை!


உவமைக் கவிதை எழுதிவந்த நான்
இன்று உண்மைக் கவிதை எழுதுகிறேன்
உன் பெயரையே கவிதையாய்!!!

தேடும் நெஞ்சம்!!!


கவிதை தேடும் என் நெஞ்சம்
உன் கண்களில் முடிகிறது!
அழகைத் தேடும் என் நெஞ்சம்
உன் இதயத்தில் முடிகிறது!
அமைதி தேடும் என் நெஞ்சம்
உன் மெளனத்தில் முடிகிறது!
இசையைத் தேடும் என் நெஞ்சம்
உன் மொழியில் முடிகிறது!
என்னைத் தேடும் என் நெஞ்சம்
அது உன்னில் முடிகிறது!!!

காவியமே!!!


விரிந்த உன் இதழ்கள்
விவரிக்கும் முன் தெரிவித்துவிட்டன
காவியம் பேசும் உன் கண்கள்!
நீ என்னைத் தேடி வந்ததையும்!
காதல் எண்ணத்தோடு வந்ததையும்!
இன்னும் ஏன் மெளனமடி???

நீ!!!


வாசிக்கத் தெரிந்த - என்
இதழில் உன் பெயர் மட்டுமே!
நேசிக்கத் தெரிந்த - என்
விழிகளில் உன் முகம் மட்டுமே!
வாழத் தெரிந்த - என்
வாழ்வில் பொருள் நீ மட்டுமே!

அள்ளிச் செல்!!

அன்பே! உன்னிடம் நான் பேச நினைக்கும்
வார்த்தைகளை விண்மீன்களாய் சிதற
விட்டிருக்கிறேன் வானெங்கும்
என்றாவது ஓர் நாள் மழைக்கால மேகமாய்
வந்து அள்ளிச் செல்லமாட்டாயா என்று!!!

உன் விழிகளில்!!!

கோவில் மணியாய் என்
குரல் கேட்டதும்
கோபுரம் பறவைகளாய் உன்
இமைகள் படபடக்கும் - அந்த
அழகைக் காணவே
ஆயிரம் முறை உன்
பெயர் சொல்லி அழைப்பேனே
ஆருயிரே!!!

நீ... நிலா!

நீ சிரிக்காவிட்டாலும் நான் வருந்துவதில்லை! வெண்ணிலா எப்போதும் சிரித்துகொண்டா இருக்கிறது?

தொண்டன்!!!

கூலிக்குச் செல்லும் தொண்டன் தலைவன் வருகையால் கொடியேற்றச் சென்றான்! கட்சிக் கொடியோ பறந்தது காற்றில் பசி எனும் இடியோ இறங்கியது வயிற்றில்!!!

கானல்!!!

உன் காதல் சாரலில் நனைய விரும்பினேன்! ஆனால் ஏனோ நீ கானல் நீராய் கண்களுக்கு மட்டுமே காட்சியாய்!

மௌனம்!!!

புரிந்த மொழி புரியாத பொருள் என்னவளே உன் மௌனம்!!!

சங்கமம்...

கீதம் ராக தாளங்களின் சங்கமம்... ஓவியம் நிஜ நிழல்களின் சங்கமம்... மௌனம் எண்ணத் தேடல்களின் சங்கமம்....

அன்னை!

நிலவுக்குள்ளே ஒரு மின்னற்கீற்று என் அன்னையின் முக சிரிப்பு

வருகை....!

உனக்காக காத்திருக்கும் ஒவ்வொரு நொடிகளும் பிறக்கின்றன ஒவ்வொரு நொடிகளும் இறக்கின்றன இறந்த நொடிகளுக்கும் பிறந்த நொடிகளுக்கும் இடையில் நான் உயிருள்ள பிணமாய் உனது வருகை பொய்தததால்.