காதல்!....



நினைவுகளின் மனனம்
கனவுகளின் பயணம்
ஆசைகளின் ஜனனம்
ஆன்மாக்களின் சரணம்
காதல் ஒரு புதினம்!...

காதல் நினைவே!




உன் நினைவுகளைத் தேடிப்
பயணிக்கிறது என் நெஞ்சம்…

காரிருள் மெளனத்தைச்
சுமந்த கருவேலங்காட்டின்
அடர்ந்த நிழல் வடிகட்டி அனுப்பிய
சன்ன வெயிலாய்…

மேகங்களைத் தொட்டுவிட்ட
மலையின் மேனியைத்தொட்டு
பூத்துச் சிரிக்கும் மலர்களின்
புன்னகையை வருடிவந்து
சலசலக்கும் நீரோடையாய்…

ஆள் அரவமற்ற கானகத்தில்
அடர்ந்து படர்ந்து
பாரியிடம் தேர் பெற்ற
முல்லைக் கொடியில் முகிழ்த்த 
முதல் பூவாய்…

என்றும் சுகமாயும் சுகந்தமாயும்
உணர்கிறேன் உன் நினைவுகளை… - நீயும்
கவர்கிறாய் என் கனவுகளை….

பாதங்கள்…




கருவறையை உதைத்து
கவலைகளை உடைத்து
அறிவைத் தேடி அன்பைத் தேடி
ஒரு பயணம்…

கல்வியைத் தேடி காதலைத் தேடி
ஒரு பயணம்…

பொருளைத் தேடி புகழைத் தேடி
ஒரு பயணம்…

பொறுப்புகள் சுமந்து புண்ணியம் தேடி
ஒரு பயணம்…

கருவறை தொடங்கி
கல்லறை நோக்கி
பாதங்களின் பயணம்…
தேடல்களின் பயணம்…

காலத்தின் மறதி....





காலம் மறக்கச்செய்ய மறந்துவிட்ட
பல நினைவுகளின் எச்சங்கள்
மனதின் மூலையில் மலைக்குன்றாய்

பாதையில் வரும் 
பனிக்காற்றும் பூஞ்சோலைகளும்
முட்செடிகளும் புதர்காடுகளும்
தோண்டிப் பார்க்கவே செய்கின்றன
புதைந்திருக்கும் நினைவுகளை

எனக்கான ஒவ்வொரு
விடியல்களிலும் பொழுதுகளிலும்
காலதேவன் முன் மண்டியிட்டு மன்றாடுகிறேன்
அத்தனை நினைவுகளையும் அள்ளிச்செல் என

ஆனாலும் நினைவெச்சங்கள் எச்சங்களாகவே
நிகழ்வின் கணங்களை அச்சுறுத்திக் கொண்டே….

நிஜத்திற்காக…




பார்வை தொடும் தூரத்தில்
பாவை நீ இருந்தும் - இந்த
பாவி மனம் உன்னை நினைப்பதிலேயே
நெடுங்காலம் கழிக்கிறது

உன் மெளனம் மொழியாகிட
விழிகள் கவிபாடிட 
நிகழப்போகும் நிஜத்திற்காக

காத்திருக்கும் என் மனம்
பல கனவுகளோடு….

உள்ளப்பூவே!


அவள் கோலமிட்டு முடிக்கையில்
சிறையாகிவிட்டிருந்தேன் அவளிட்ட
கோலத்தின் கோடுகளுக்குள் புள்ளிகளாய்...

அவள் பின்னலிட்டு முடிக்கையில்
சிறையாகிவிட்டிருந்தேன் சீவிமுடித்த
சிகையின் சிக்கலுக்குள் மல்லிகையாய்...

அவள் மாலையிட்டு மணமுடிக்கையில்
சிறையாகிவிட்டிருந்தன மலர்கள்
என் கைகளுக்குள் அட்சதையாய்...

என் உள்ளத்துக்கும் உள்ளங்கைப்
பூக்களுக்கும் மட்டுமே தெரியும்
இது ஒருதலைக்காதலின் திருவிளையாடலென்று...

கனவுக்குள்...


நேற்று என் கனவில் நீ இல்லை!...

விழிகளுக்குள்ளே நீ விளையாடிக்கொண்டிருக்க
உறக்கம் எங்கே வருகிறது
கனவுகள் காண?

உறங்காத என் கண்களுக்கு ஓய்வுகொடு..
இன்றொரு நாள் இடம் மாறிவிடு...

கண்களுக்குள்ளிருந்து கனவுக்குள்..

உறங்கிக்கொள்கிறேன் ஒரு நாளாவது...

நீ + நான் = நாம்!


என்னவளே!

சொல்லத்தெரியாத என்
காதலைப் பற்றி
விழித்தே இருக்கும் என்
விழியைக் கேளடி!
நினைத்தே கிடக்கும் என்
நெஞ்சத்தைக் கேளடி!
புசிக்காமலே இருக்கும் என்
பசியைக் கேளடி!
மௌனித்தே இருக்கும் என்
மொழியைக் கேளடி!
இதனைத் தெரிந்தும்
தெரியாமல் நடிக்கும்
உன் இதயத்தைக் கேளடி!
நான் சொல்லாமலே அறிவாய்
என்
உன்
நம்
காதலை....

கடலும் காதலியும்...!


கடற்கரைக் காற்றாய்
அவளின் சுவாசம்...
கடற்கரை நிலவாய்
அவள் கண்களின் குழுமை...
கடலலையாய் தவழும்
அவள் முதுகில் கூந்தல்...
ஆழ்கடலின் வலம்புரியாய்
அவள் அழகுத் தேன்குரல்...
கடலுக்கும் என் காதலிக்கும்
என்ன சம்பந்தம்?!
நான் முழுவதுமாய் மூழ்கிவிட்டேன்
அவள் இதயக்கடலின் ஆழத்தில்...

நிழலாய்!


புல்லாங்குழலைத் தழுவும் புதுத்தென்றலாய்
நகர்ந்துகொண்டே இருக்கும்
உந்தன் நினைவுகள்...

அதனை தொடர்ந்துகொண்டே இருக்கும்
எந்தன் நிழல்...
வெறும் கருப்பு நிழல் மட்டுமல்ல
உன் இதயத்தை கரையச் செய்யும்
காதல் நிழலும் கூட...

நீ வரவேண்டும்...


ஒற்றைக் கதவறையின்
ஒற்றைச் சாவியையும் தொலைத்துவிட்டு
அடைபட்டுக் கிடக்கும்
அபலையாய் உணர்கிறேன்...
நீ இல்லாத என் வாழ்க்கையை...

குளிர் தென்றல் வீசும்
சன்னல் வெளிச்சமாக இல்லாவிட்டாலும்

கூரை வழியே கிடைக்கும்
சன்ன வெளிச்சமாகவாவது வருவாயா?

என் வாழ்க்கையில் ஒளியூட்ட...

துளிர்க்கும் நினைவுகள்!!!



அருகம்புல்லாய் ஊன்றிவிட்டாய்
என் இதயத்தில்...

வெட்டிக்கொண்டே இருக்கிறேன்
உன் நினைவுத் துளிர்களை...

வளர்ந்துகொண்டே இருக்கிறது
உன் காதல் தளிராய்...!

நாணமே!!!



சொல்லத்துடிக்கும் மனதை
மெல்லத்தடுக்கிறது நாணம்...
மனம் அழுகிறது என்றாலும்,
ஊமை கண்ட கனவாய்
உள்ளத்திலே என் காதல்...

விழிகளில் வெள்ளமாய்
வழிகிறது என் உள்ளம்...

கண்ணீரில் நனைந்தது என்
கண்மை மட்டுமல்ல
காவலாய் நின்ற நாணமும்தான்...

இதோ சொல்லிவிட்டேன் என் காதலை...
வென்றுவிட்டேன் நாணக்காவலை...

இனி...
உன் உள்ளங்கையில்
என் உள்ளம்...