மலடியின் மனது... (மலடி இவளின் துணைப்பெயர்)













கல்லெறிந்த குளமாய் மனம்
கலங்கித்தான் போகிறது...

மலடி எனும் மூன்றெழுத்தே
என் பெயராகிப் போனதில்...

எரியூட்டப்பட்ட சிதையாய் மனம்
எழுந்தாலும் இறுதியில்
எஞ்சுவதென்னவோ கொஞ்சம்
மௌனச் சாம்பலே...

மகரந்தம் சுமக்கும்
மலராகப் பிறந்திருக்கலாம்
மண் துளைத்து முளைக்கும்
விதைகளை ஈன்றிருப்பேன்...

மழைத்துளிகளை தாங்கும்
சிப்பியாகப் பிறந்திருக்கலாம்
மணிக்கழுத்தில் தவழும்
முத்துக்களை ஈன்றிருப்பேன்...

பெண்ணாகப் பிறந்து
மண்ணாகிப் போன வயிற்றால்...

கவலைக் கருவைச்சுமக்கும் என்
கண்கள்...
கண்ணீர்த் துளிகளை அல்லவா
பிரசவிக்கின்றன..?!

தேவதையின் வரம் கேட்ட எனக்கு...
சாத்தானின் சாபமே
சாஸ்வதமாகிப் போனதேன்?

அந்த தேவதை என்போல்
பெண்ணில்லையோ... - இல்லை

அவளுக்கு இதுபோல்
விதியில்லையோ...

தெய்வமே உனக்கு
விழியில்லையோ...

தென்றலே என்வாசலில்
வழியில்லையோ...

--- உரையாடல் கவிதைப் போட்டிக்காக எழுதிய கவிதை இது...