பிரிவுத்தூறல்...!தூறும் மழைச்சாரலும்
உன் புன்னகையும்
ஒன்றெனவே தோன்றியது
நம்முடன் கைகோர்த்து நாட்கள் நடந்தபோது...

இன்று...

நாட்காட்டிக் காகிதங்கள்
என்னைக் கிழித்துத்
தன்னைத் தொலைக்கிறது...

இன்றும் உன்னை ஒப்பிடுகிறது மனது...

வெடித்துக்கிடக்கும் நிலத்தைப்பார்த்து
வெளிரிச்சிரிக்கும் மேகத்தோடு...!


உடையும் கனவுகள்!


மஞ்சள்வெயில் மாலையில்
மெல்ல நகரும் முகில்கள்...
காற்றோடு
பட்டும் படாமலும்
தொட்டும் தொடாமலும்
உரசிச்செல்வதைப்போல

என் நெஞ்சமெங்கும்
உன் நினைவுகள்...

சோப்புக்குமிழிகளாய்
உயிர்பெறும் உன் நினைவுகளைச் 
சிறுகுழந்தையாகிச் சிலாகிக்கிறேன்...
உடைந்துவிடும் எனத்தெரிந்தும்...குறும்பா....

பரமன் பாம்புக்குப் படி அளந்தான்
பலியாகிப்போனது தவளை
மழைக்கால இரவு...