காதல்!....நினைவுகளின் மனனம்
கனவுகளின் பயணம்
ஆசைகளின் ஜனனம்
ஆன்மாக்களின் சரணம்
காதல் ஒரு புதினம்!...

காதல் நினைவே!
உன் நினைவுகளைத் தேடிப்
பயணிக்கிறது என் நெஞ்சம்…

காரிருள் மெளனத்தைச்
சுமந்த கருவேலங்காட்டின்
அடர்ந்த நிழல் வடிகட்டி அனுப்பிய
சன்ன வெயிலாய்…

மேகங்களைத் தொட்டுவிட்ட
மலையின் மேனியைத்தொட்டு
பூத்துச் சிரிக்கும் மலர்களின்
புன்னகையை வருடிவந்து
சலசலக்கும் நீரோடையாய்…

ஆள் அரவமற்ற கானகத்தில்
அடர்ந்து படர்ந்து
பாரியிடம் தேர் பெற்ற
முல்லைக் கொடியில் முகிழ்த்த 
முதல் பூவாய்…

என்றும் சுகமாயும் சுகந்தமாயும்
உணர்கிறேன் உன் நினைவுகளை… - நீயும்
கவர்கிறாய் என் கனவுகளை….

பாதங்கள்…
கருவறையை உதைத்து
கவலைகளை உடைத்து
அறிவைத் தேடி அன்பைத் தேடி
ஒரு பயணம்…

கல்வியைத் தேடி காதலைத் தேடி
ஒரு பயணம்…

பொருளைத் தேடி புகழைத் தேடி
ஒரு பயணம்…

பொறுப்புகள் சுமந்து புண்ணியம் தேடி
ஒரு பயணம்…

கருவறை தொடங்கி
கல்லறை நோக்கி
பாதங்களின் பயணம்…
தேடல்களின் பயணம்…

காலத்தின் மறதி....

காலம் மறக்கச்செய்ய மறந்துவிட்ட
பல நினைவுகளின் எச்சங்கள்
மனதின் மூலையில் மலைக்குன்றாய்

பாதையில் வரும் 
பனிக்காற்றும் பூஞ்சோலைகளும்
முட்செடிகளும் புதர்காடுகளும்
தோண்டிப் பார்க்கவே செய்கின்றன
புதைந்திருக்கும் நினைவுகளை

எனக்கான ஒவ்வொரு
விடியல்களிலும் பொழுதுகளிலும்
காலதேவன் முன் மண்டியிட்டு மன்றாடுகிறேன்
அத்தனை நினைவுகளையும் அள்ளிச்செல் என

ஆனாலும் நினைவெச்சங்கள் எச்சங்களாகவே
நிகழ்வின் கணங்களை அச்சுறுத்திக் கொண்டே….

நிஜத்திற்காக…
பார்வை தொடும் தூரத்தில்
பாவை நீ இருந்தும் - இந்த
பாவி மனம் உன்னை நினைப்பதிலேயே
நெடுங்காலம் கழிக்கிறது

உன் மெளனம் மொழியாகிட
விழிகள் கவிபாடிட 
நிகழப்போகும் நிஜத்திற்காக

காத்திருக்கும் என் மனம்
பல கனவுகளோடு….