நிழலாய்!


புல்லாங்குழலைத் தழுவும் புதுத்தென்றலாய்
நகர்ந்துகொண்டே இருக்கும்
உந்தன் நினைவுகள்...

அதனை தொடர்ந்துகொண்டே இருக்கும்
எந்தன் நிழல்...
வெறும் கருப்பு நிழல் மட்டுமல்ல
உன் இதயத்தை கரையச் செய்யும்
காதல் நிழலும் கூட...

நீ வரவேண்டும்...


ஒற்றைக் கதவறையின்
ஒற்றைச் சாவியையும் தொலைத்துவிட்டு
அடைபட்டுக் கிடக்கும்
அபலையாய் உணர்கிறேன்...
நீ இல்லாத என் வாழ்க்கையை...

குளிர் தென்றல் வீசும்
சன்னல் வெளிச்சமாக இல்லாவிட்டாலும்

கூரை வழியே கிடைக்கும்
சன்ன வெளிச்சமாகவாவது வருவாயா?

என் வாழ்க்கையில் ஒளியூட்ட...

துளிர்க்கும் நினைவுகள்!!!



அருகம்புல்லாய் ஊன்றிவிட்டாய்
என் இதயத்தில்...

வெட்டிக்கொண்டே இருக்கிறேன்
உன் நினைவுத் துளிர்களை...

வளர்ந்துகொண்டே இருக்கிறது
உன் காதல் தளிராய்...!

நாணமே!!!



சொல்லத்துடிக்கும் மனதை
மெல்லத்தடுக்கிறது நாணம்...
மனம் அழுகிறது என்றாலும்,
ஊமை கண்ட கனவாய்
உள்ளத்திலே என் காதல்...

விழிகளில் வெள்ளமாய்
வழிகிறது என் உள்ளம்...

கண்ணீரில் நனைந்தது என்
கண்மை மட்டுமல்ல
காவலாய் நின்ற நாணமும்தான்...

இதோ சொல்லிவிட்டேன் என் காதலை...
வென்றுவிட்டேன் நாணக்காவலை...

இனி...
உன் உள்ளங்கையில்
என் உள்ளம்...