உள்ளப்பூவே!


அவள் கோலமிட்டு முடிக்கையில்
சிறையாகிவிட்டிருந்தேன் அவளிட்ட
கோலத்தின் கோடுகளுக்குள் புள்ளிகளாய்...

அவள் பின்னலிட்டு முடிக்கையில்
சிறையாகிவிட்டிருந்தேன் சீவிமுடித்த
சிகையின் சிக்கலுக்குள் மல்லிகையாய்...

அவள் மாலையிட்டு மணமுடிக்கையில்
சிறையாகிவிட்டிருந்தன மலர்கள்
என் கைகளுக்குள் அட்சதையாய்...

என் உள்ளத்துக்கும் உள்ளங்கைப்
பூக்களுக்கும் மட்டுமே தெரியும்
இது ஒருதலைக்காதலின் திருவிளையாடலென்று...

கனவுக்குள்...


நேற்று என் கனவில் நீ இல்லை!...

விழிகளுக்குள்ளே நீ விளையாடிக்கொண்டிருக்க
உறக்கம் எங்கே வருகிறது
கனவுகள் காண?

உறங்காத என் கண்களுக்கு ஓய்வுகொடு..
இன்றொரு நாள் இடம் மாறிவிடு...

கண்களுக்குள்ளிருந்து கனவுக்குள்..

உறங்கிக்கொள்கிறேன் ஒரு நாளாவது...