நேற்றிரவு பெய்த மழை!நேற்றிரவு பெய்த மழையில்


தலை துவட்டிக்கொண்ட அடர்மரங்கள்
குளித்து அழுக்ககற்றிக்கொண்ட சாலைகள்
புகைப்படலம் நீங்கிய கட்டிடச்சுவர்கள்
பூத்துச்சிரிக்கும் வேலியோர மலர்ச்செடிகள் 

தேங்கியிருக்கும் நீரில் குதித்து
விளையாடிக்களிக்கும் சேரிச்சிறுவன்

வேதனை....

மழைக்குமில்லை
மழலைச் சிறுவனுக்குமில்லை...
மௌனமழை...!
நிதமும் தான் நான்
நனைகிறேன் என்றாலும்....

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு அர்த்தங்களைப்

பொழிகிறது உன் மௌனம்...


Image Courtesy :- Google

குறும்பா...!
உள்ளக் கவலை  துடைக்கும்
உப்புத்தண்ணீர்
கண்ணீர்...
வசந்தத்திற்கும்
வறுமையோ
...கோடை வெயில்


Image Courtesy :- Google

ஓர் இதயத்தவம்...!


உன் நினைவுகளைப் பதியமிட்டு
கண்ணீரூற்றி வளர்க்கிறது பிரிவு...
நம் காதலை...

என் முட்பாதையிலும்
பூக்கள் முளைக்கிறது...

இந்தப் பாலை மனத்திலும் 
சோலை மணக்கிறது...

உணர்வுக்கருவில் 
உதித்த இம்மலருடன் 
உனக்கெனச் செய்வேன்
ஓர் இதயத்தவம்...

நீ வரும் வழி நோக்கி...!!!


Image Courtesy:- Google.
௨ ௪ ௭...ஒவ்வொரு பொழுதும்
ஓடோடி வந்து

காதோரக் கூந்தல்
கலைத்துப் பேசிய கொஞ்சல்களும்...

உடல் சிலிர்க்கச் செய்த
குளிர் தீண்டல்களும்...

ஆடை கலைத்துச்
சீண்டிய செல்லக்குறும்புகளும்...

இன்னும்...

சுவாசமாகிச் சேர்ந்து
உதிரத்தில் உயிர் வரைந்த

காற்றே!!!

உன்னைக் காதலிக்கிறேன்....


தலைப்புக் குறிப்பு : ௨ ௪ ௭ (2 4 7 - நான் உன்னைக் காதலிக்கிறேன்) 


Image Courtesy : Google

இ(க)யலும் இசையும்...!

தண்ணீர் குளத்தில் என்
கண்ணீர் கரைய
காலமெல்லாம் நீந்தியும்
கரை விரும்பாக் கயல் நான்...

இமைக்காத விழிகளின்
பாரம் தீர
இசைக்கவந்தாயோ நீருக்குள் ராகம்...!

கண்ணீருக்கு மருந்தாக
கவலைக்கு விருந்தாக
தனிமைக்குத் துணையாக

சோகம் உடைத்து
ஸ்வரம் பாட
என் தேவன் தந்த வீணையோ நீ!!!


Image Courtesy : Google

குறும்பா...


குடைக்குள் மழை
ஏழையின்
வறுமைப் பிழை...Image Courtesy : Google

பார்வை....!பற்றவைக்கப்படாத
தீக்குச்சியாய்


மிரட்டிக்கொண்டிருந்த
நினைவுகளைப்
பட்டென்று உரசிச்
சாம்பலாக்கியது 


உன் பார்வை....!Image Courtesy : Google

மழைக்காலம்...!எறும்பின் வாயில்
கிட்டிய உணவாய்...

உன் நினைவுகளனைத்தும்
என் இதயக்கிடங்கின் சேமிப்பில்...

எந்த நேரமும் வரலாம்
கண்ணீர் மழைக்காலம்...!


Image Courtesy : Google

ஒத்திகை...
இரவுகள் தோறும்
இருவிழிகளின் தியானத்தில்
இறுதிப் பயணத்திற்கு
ஒத்திகையோ...
நித்திரை.....!!!

Image courtesy - Google

செல்லக்குறிப்புகள்....!சோடி இழந்த செருப்பு
கிறுக்கல் சுவர்
மீசை முளைத்த புத்தகப்படங்கள்
உரக்கச் சொல்கின்றன - இது
குழந்தைகள் வாழும் வீடு...!

படம் - இணையத்தின் உதவியில்...

காதல்...


விழிச்சிப்பிக்குள்
விழுந்துவிட்டாய்
பார் அன்பே...
கருமுத்துக்களாய் ஒளிர்கிறது
என் காதல்....

உழவர் திருநாள்...


எண்ணம் சிறக்க
பசுமை செழிக்க
செல்வம் பெருக
பொங்குக பொங்கல்...இணைய உறவுகள் அனைவருக்கும் இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்....


--
அன்புடன்
கவிநா...

திரும்பிப் பார்க்கிறேன் -- 2010


கடந்த வருடத்தில் (2010) நடந்த நிகழ்வுகளைப்பற்றி தொடர்பதிவெழுத  அழைத்திருந்தார் கௌசல்யா அக்கா. அவருக்கு என் நன்றிகள்.

இதுவரை கவிதைகள் மட்டுமே எழுதி வந்த என் வலைப்பூவில் வித்தியாசமான முதல் பதிவு இது.
என்னால் எழுத முடியுமா என்ற கேள்விக்குறியுடன் தான் ஆரம்பித்திருக்கிறேன்.

வலைப்பூ

2007 -ஆம் வருடத்திலேயே எனது வலைப்பூ பயணம் ஆரம்பித்திருந்தாலும், மற்ற நண்பர்களின் வலைப்பூக்களை அதிகம் வாசிக்க வாய்ப்பளித்தது இந்த 2010 தான். அந்த விதத்தில் இது எனக்கு மிகச்சிறந்த வருடம்.

அடுத்து, ஓவியக்காதல் என்ற என் இன்னொரு வலைப்பூவை துவங்கியதும் இந்த வருடம் தான்.

நட்புறவுகள்

பொதுவாகவே இணையம் என்றாலே பெண்களுக்கு ஏற்படும் பயத்துடன் தான் என் பயணமும் துவங்கியது. ஆனால், எனக்கு வாய்த்த சகோதர சகோதரிகள், தோழர் தோழிகள் அந்த ஐயத்தைத் துடைத்துவிட்டனர். கடந்த வருடத்தை திரும்பிப்பார்க்கும் வேளையில் என்றும் என்னுடன் கைகோர்த்து ஊக்கமளிக்கும் உள்ளங்களையும் நினைவுகளையும் நெஞ்சம் துடிக்கிறது.

நண்பர்கள் விஷ்ணு, விஜய், சீமாங்கனி, D.R.அசோக், சரவணன், கணேஷ் தோழிகள் தென்றல், ஹேமா, பூங்குழலி அக்கா, கௌசல்யா அக்கா இன்னும் பல உள்ளங்கள் என் எழுத்துக்களைப் படித்து அவற்றைச் செம்மைப்படுத்த ஊக்கமளிக்கின்றனர். அவர்களுக்கு என் நன்றிகளையும் சமர்ப்பிக்கிறேன்.

ரசிக்கும் எழுத்துக்கள்
 

நான் தொடரும் வலைப்பூக்கள் பெரும்பாலும் கவிதைகள் பற்றியதாகத்தானிருக்கும். அதில் சில விதிவிலக்குகள் என்றால், கணேஷ்-இன் வலைப்பூ, மற்றும் கௌசி அக்காவின் "மனதோடு மட்டும்".
கணேசின் நகைச்சுவை கலந்த அறிவியல் பிடிக்கும். கௌசி அக்காவின் மனதோடு பேசும் எழுத்துக்கள் பிடிக்கும்.
சரவனக்குமாரின் "பார்த்ததும் படித்ததும்" வலைப்பூ. அவர் படித்து ரசித்ததையெல்லாம் எழுதுகிறார். இப்போது கொஞ்ச நாட்களாக சுயமாக நிறைய விஷயங்களை பதிவிடுகிறார். சரவணன் எனக்கொரு நல்ல நண்பன்.
விஜய் அண்ணாவின் கவிதைகள், அவை என்னால் விமர்சிக்கமுடியாத உயரத்தில் இருப்பவை. அவரின் எழுத்துக்களைப் படிக்க நான் அகராதி ஒன்றை வாங்குவதாய் இருக்கிறேன். :)
இன்னும் நான் ரசிக்கும் பல வலைப்பூக்கள் இருக்கின்றன.

என் டைரி

நிகழ்வுகளைப் பதிய
நேரமில்லை
நினைவுகளைப் பதிகிறேன்
கவிதைகளாக்கி....

இணையம் 

இணையம் இன்னுமொரு தனி உலகம். எழுத, படிக்க, பகிர, மகிழ, அறிய, வாழ அத்தனைக்கும் வழிவகுக்கும் மற்றொரு பூமி.
இந்த பூமியில் காலாற உலவ 2011 நம்மை வரவேற்றிருக்கிறது. அனைவருக்கும் இவ்வருடம் இனிதாக அமைய நல்வாழ்த்துக்கள்...


தொடர்பதிவெழுத யாரையேனும் அழைக்கவேண்டுமே!!??

எனக்குத்தெரிந்த பலரையும் பலர் அழைத்துவிட்டதால் தொடர்பதிவின் இலக்கணத்தை மீறுகிறேன். மன்னிக்கவும்... :(


பின்குறிப்பு:-


வெற்றுப் பக்கங்களே
விதியாய்க் கொண்டு
என்னிடம் அடைக்கலமான
என் டைரி....


இந்த நிலை மாற,
இந்த வருடமாவது உருப்படியாக சொல்லும்படி எதாவது செய்வேன் என்ற நம்பிக்கையில் 2011 -ஆம் வருடத்தை பூத்தூவி வரவேற்கிறேன்... :)))

வண்ணத்துப்பூச்சி...

இறகுச் சுவற்றில்
வரைந்து வைத்த
வண்ணச்சித்திரம்...

தேர்ந்த ஓவியனின்
எண்ணக்குறிப்போ...!!!