கூ... கூ... ரயிலே...



தினமும் செய்யும் சமரச முயற்சி
என்றும் இணையா தண்டவாளம்
தொடரும் முயற்சியாய்
ரயிலின் பயணம்...


ஹைக்கூ...



தென்றல் தொட்டதும்
தன்னையே மாய்த்துக்கொள்கிறதோ
பத்தினி தீச்சுடர்...!

நன்றி...




தன்னைத் தருவித்த
மண்ணுக்குத் தலைவணக்கமோ...
தானே உதிர்ந்து
மண்ணைத்தொட்ட மலரிதழ்கள்!..

பிரிவு!!!!


எச்சில் விழுங்கி
ஈரப்படுத்திக்கொண்ட தொண்டையில் - இன்னும்
மிச்சமிருக்கிறது
உனக்கான என் அழுகை...

நீ என்னைப் பிரிந்தநாளின் துயரம் - என்
மனச்சுவற்றின் மேல் எம்பிக்குதிக்கிறது
உன்னுடனான இனிய நினைவுகளால்
மனச்சுவற்றின் உயரத்தை நீட்டித்துக்கொள்கிறேன்...

உண்மை சொல்லி - மனம்
உரக்கக் கத்தினாலும்
கண்ணில் வழியும் கண்ணீர் - அதன்
சத்தத்தைத் தன்னோடு கரைத்துக்கொண்டோடுகிறது...

அநாதை...



முகவரி இல்லாக் கடிதம்...
தனித்து மேயும் ஒற்றை ஆடு...
நெடுக உயர்ந்த பட்டமரம்...
கல்லடிப்பட்டு கதறும் நாய்க்குட்டி...
கையேந்தி நிற்கும் தெருவோரச்சிறுமி...
என்று எங்கேனும் எப்போதும் ஏதாவதொன்று
நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறது
நான் அநாதை என்று...

என் செய்தாய் அன்பே?














என் இரவுக்குள்ளே இரைத்துவிட்டானோ
வானவில்லின் சாயங்களை
கனவுகள் எல்லாம்  வர்ணங்களில்...

என் இதயத்துக்குள்ளே இசைக்கவிட்டானோ
காட்டுக்குயிலின் கானங்களை
துடிப்புகள் எல்லாம்  ராகங்களில்...

என் உயிருக்குள்ளே உலவவிட்டானோ
நிம்மதியின் சாரங்களை
நினைவுகள் எல்லாம் சொர்க்கங்களில்...

சிறை...

















உனைச் சிறைவைப்பேன்
இரு இமைகளுக்குள்....

காதலனே....!

என் உறக்கம் திருடிய
கள்வன் நீ..!

மேகக்காதலி...!





















மிதக்கும் மேகங்களில்
ஒருத்தியாய் நான்...

காற்றின் அசைவுக்கு நகர்வதாய் - உன்
காதலின் அசைவுக்கு இசைகிறேன்...

உன்னில் பருகிய காதலை
மண்ணில் பொழிகிறேன் மழையாக...

மண்ணைச்சேர்ந்த காதல் மழை
மீண்டும் என் மடிசேர்கிறது...

இதோ...

மிதக்கும் மேகங்களில் ஒருத்தியாய்
மீண்டும் நான் - உன்

காதலைப் பருகப்பருக...
தீராத தாகத்தில்...

படம் உதவி - நன்றி நண்பர் விஷ்ணு...

கொலுசு...!
















என்ன தவம்தான்
செய்து வந்ததோ...?! - உன்
வெள்ளிக்கொலுசுகள்...
துள்ளி விளையாடும் -
உன் பாதங்களைக்
கிள்ளி உறவாடிக்களிக்கிறதே...!!!

காதல் சிற்பம்!





















கருவிழிக் கணைபட்டு
உருகியது எனதுள்ளம்...!!!

வழிகின்ற இதயத்தை வழித்தெடுத்து
வடித்துத் தருவாயா
களங்கமில்லாக் காதல் சிற்பத்தை...?

என்
ஆயுள் மேடை
ஆயத்தமாயிருக்கிறது...
அலங்கரிக்கவரும்
அற்புதக்காதலை நோக்கி...

ஹைக்கூ












கணவன் இறந்ததால் விதவைக்கோலமோ
வெள்ளைத் தாளின் மேல்
மைதீர்ந்த பேனா...

கனவுக்குழந்தை...!





















என் கனவுக்கு உயிர் கொடுத்த
காதலே...

உறக்கம் என்பதே
இறந்தகாலம் என்றாகிவிட்டது
எனக்கு...

என் கனவுக்குழந்தையிடம்
கண் சிமிட்டி விளையாடி...
கதை பேசி தூங்கவைக்க...

கூட்டிவருவாயா என் காதலியை...!

மலடியின் மனது... (மலடி இவளின் துணைப்பெயர்)













கல்லெறிந்த குளமாய் மனம்
கலங்கித்தான் போகிறது...

மலடி எனும் மூன்றெழுத்தே
என் பெயராகிப் போனதில்...

எரியூட்டப்பட்ட சிதையாய் மனம்
எழுந்தாலும் இறுதியில்
எஞ்சுவதென்னவோ கொஞ்சம்
மௌனச் சாம்பலே...

மகரந்தம் சுமக்கும்
மலராகப் பிறந்திருக்கலாம்
மண் துளைத்து முளைக்கும்
விதைகளை ஈன்றிருப்பேன்...

மழைத்துளிகளை தாங்கும்
சிப்பியாகப் பிறந்திருக்கலாம்
மணிக்கழுத்தில் தவழும்
முத்துக்களை ஈன்றிருப்பேன்...

பெண்ணாகப் பிறந்து
மண்ணாகிப் போன வயிற்றால்...

கவலைக் கருவைச்சுமக்கும் என்
கண்கள்...
கண்ணீர்த் துளிகளை அல்லவா
பிரசவிக்கின்றன..?!

தேவதையின் வரம் கேட்ட எனக்கு...
சாத்தானின் சாபமே
சாஸ்வதமாகிப் போனதேன்?

அந்த தேவதை என்போல்
பெண்ணில்லையோ... - இல்லை

அவளுக்கு இதுபோல்
விதியில்லையோ...

தெய்வமே உனக்கு
விழியில்லையோ...

தென்றலே என்வாசலில்
வழியில்லையோ...

--- உரையாடல் கவிதைப் போட்டிக்காக எழுதிய கவிதை இது...


காதல்!....



நினைவுகளின் மனனம்
கனவுகளின் பயணம்
ஆசைகளின் ஜனனம்
ஆன்மாக்களின் சரணம்
காதல் ஒரு புதினம்!...

காதல் நினைவே!




உன் நினைவுகளைத் தேடிப்
பயணிக்கிறது என் நெஞ்சம்…

காரிருள் மெளனத்தைச்
சுமந்த கருவேலங்காட்டின்
அடர்ந்த நிழல் வடிகட்டி அனுப்பிய
சன்ன வெயிலாய்…

மேகங்களைத் தொட்டுவிட்ட
மலையின் மேனியைத்தொட்டு
பூத்துச் சிரிக்கும் மலர்களின்
புன்னகையை வருடிவந்து
சலசலக்கும் நீரோடையாய்…

ஆள் அரவமற்ற கானகத்தில்
அடர்ந்து படர்ந்து
பாரியிடம் தேர் பெற்ற
முல்லைக் கொடியில் முகிழ்த்த 
முதல் பூவாய்…

என்றும் சுகமாயும் சுகந்தமாயும்
உணர்கிறேன் உன் நினைவுகளை… - நீயும்
கவர்கிறாய் என் கனவுகளை….

பாதங்கள்…




கருவறையை உதைத்து
கவலைகளை உடைத்து
அறிவைத் தேடி அன்பைத் தேடி
ஒரு பயணம்…

கல்வியைத் தேடி காதலைத் தேடி
ஒரு பயணம்…

பொருளைத் தேடி புகழைத் தேடி
ஒரு பயணம்…

பொறுப்புகள் சுமந்து புண்ணியம் தேடி
ஒரு பயணம்…

கருவறை தொடங்கி
கல்லறை நோக்கி
பாதங்களின் பயணம்…
தேடல்களின் பயணம்…

காலத்தின் மறதி....





காலம் மறக்கச்செய்ய மறந்துவிட்ட
பல நினைவுகளின் எச்சங்கள்
மனதின் மூலையில் மலைக்குன்றாய்

பாதையில் வரும் 
பனிக்காற்றும் பூஞ்சோலைகளும்
முட்செடிகளும் புதர்காடுகளும்
தோண்டிப் பார்க்கவே செய்கின்றன
புதைந்திருக்கும் நினைவுகளை

எனக்கான ஒவ்வொரு
விடியல்களிலும் பொழுதுகளிலும்
காலதேவன் முன் மண்டியிட்டு மன்றாடுகிறேன்
அத்தனை நினைவுகளையும் அள்ளிச்செல் என

ஆனாலும் நினைவெச்சங்கள் எச்சங்களாகவே
நிகழ்வின் கணங்களை அச்சுறுத்திக் கொண்டே….

நிஜத்திற்காக…




பார்வை தொடும் தூரத்தில்
பாவை நீ இருந்தும் - இந்த
பாவி மனம் உன்னை நினைப்பதிலேயே
நெடுங்காலம் கழிக்கிறது

உன் மெளனம் மொழியாகிட
விழிகள் கவிபாடிட 
நிகழப்போகும் நிஜத்திற்காக

காத்திருக்கும் என் மனம்
பல கனவுகளோடு….

உள்ளப்பூவே!


அவள் கோலமிட்டு முடிக்கையில்
சிறையாகிவிட்டிருந்தேன் அவளிட்ட
கோலத்தின் கோடுகளுக்குள் புள்ளிகளாய்...

அவள் பின்னலிட்டு முடிக்கையில்
சிறையாகிவிட்டிருந்தேன் சீவிமுடித்த
சிகையின் சிக்கலுக்குள் மல்லிகையாய்...

அவள் மாலையிட்டு மணமுடிக்கையில்
சிறையாகிவிட்டிருந்தன மலர்கள்
என் கைகளுக்குள் அட்சதையாய்...

என் உள்ளத்துக்கும் உள்ளங்கைப்
பூக்களுக்கும் மட்டுமே தெரியும்
இது ஒருதலைக்காதலின் திருவிளையாடலென்று...

கனவுக்குள்...


நேற்று என் கனவில் நீ இல்லை!...

விழிகளுக்குள்ளே நீ விளையாடிக்கொண்டிருக்க
உறக்கம் எங்கே வருகிறது
கனவுகள் காண?

உறங்காத என் கண்களுக்கு ஓய்வுகொடு..
இன்றொரு நாள் இடம் மாறிவிடு...

கண்களுக்குள்ளிருந்து கனவுக்குள்..

உறங்கிக்கொள்கிறேன் ஒரு நாளாவது...